பன்றிக்கு வைத்த குறி தவறியது.. 4 வயது சிறுமி பரிதாப பலி.. ஆந்திராவில் சோகம்!

 
Andhra

ஆந்திராவில் பன்றிக்கு வைத்த குறி தவறியதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அடுத்துள்ள வெலமா கொத்துரு கிராமத்தை சேர்ந்தவர் பாலிவேல ராஜு. இவரது மனைவி நாகலட்சுமி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு தன்யாஸ்ரீ (4) என்ற மகள் இருந்தார். நேற்று தன்யாஸ்ரீ வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

gun

அப்போது அங்கு சிலர் துப்பாக்கியால் பன்றிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். அப்போது பன்றிக்கு வைத்த குறி தவறிய துப்பாக்கி குண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தன்யாஸ்ரீ மீது பாய்ந்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது சிறுமி தன்யஸ்ரீ ரத்த வெள்ளத்தில் மூச்சு திணறிக்கொண்டிருந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை மீட்டு அருகில் உள்ள துனி நகர மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், குற்றவாளியை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrest

விசாரணையில், துனி மண்டலம் வெலமா கொத்துரு கிராமத்தை சேர்ந்த சித்தன்தாபு துர்காபிரசாத் என்பவர் கடந்த சில நாட்களாக அருகில் உள்ள காடுகளில் வனவிலங்குகளை துப்பாக்கி ஏந்தியபடி வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web