மணிப்பூர் விவகாரம்.. நாடாளுமன்றதில் கருப்பு உடையில் பங்கேற்பு.. இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

 
Rajya Sabha

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. எனினும், 5 நாள்களாக மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி அதன் பின்னர், இந்த விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக இன்று கருப்பு உடை அணிந்து நாடாளுமன்றம் வர எதிர்க்கட்சி எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. “நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருவது என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு மட்டுமல்ல. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் முடிவு” என காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி தெரிவித்தார்.

Manipur

இந்த நிலையில், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை 6-வது நாளாக இன்றும் முடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன.

INDIA

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்தியா, இந்தியா என முழக்கமிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் முழக்கத்தையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் மோடி... மோடி... மோடி...என முழக்கமிட்டனர். இவ்வாறு இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர்.

From around the web