கிளப் அவுஸ் மூலம் மலர்ந்த காதல்... நிர்வாண வீடியோவை காட்டி பிளாக்மெயில்... மிரட்டல் மன்னனுக்கு போலீஸ் வலை!
திருமணம் செய்ய வற்புறுத்தி நிர்வாண வீடியோவை அனுப்பி இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சென்னை வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கிளப் ஹவுஸ் என்கிற டேட்டிங் செயலி மூலமாக சென்னையை சேர்ந்த திலிப் குமார் என்பவருடன் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமாகி உள்ளார். சிறிது காலம் சென்ற பின் இருவரும் நெருங்கி பழகி காதலர்களாகி உள்ளனர். பின்னர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வாயிலாக இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.
இந்த நிலையில், சில வாரங்கள் முன்னர் இளம்பெண்ணிற்கும், திலீப் குமாருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், அந்த இளம்பெண் காதலுக்கு குட்பை சொன்னதாக தெரிகிறது. காதலை முறித்துக்கொள்ள மறுப்பு தெரிவித்த திலீப் குமார், “நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், பயந்துபோன அப்பெண் திலீப் குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, “உன்னை தொந்தரவு செய்யக்கூடாது என்றால், நிர்வாணமாக வீடியோ காலில் பேச வேண்டும்” என திலீப்குமார் வற்புறுத்தியுள்ளார். அவரது மோசடி பேச்சை நம்பிய இளம்பெண் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியிருக்கிறார்.
அப்போது, அந்த வீடியோவை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்த தீலிப், அதனை இளம்பெண்ணிற்கு அனுப்பி, “தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார். இல்லையெனில் நிர்வாண வீடியோவை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்புவதோடு, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இது தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள திலீப் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.