புத்தாண்டை கொண்டாட சென்ற சிறுமி.. பேருந்து ஓட்டுநருடன் சடலமாக மீட்பு.. போலீஸ் விசாரணை!
கர்நாடகாவில் புத்தாண்டை கொண்டாட செல்வதாக கூறிவிட்டு வெளியேறிய 14 வயது சிறுமி பேருந்து ஓட்டுநருடன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் அஜ்ஜம்பூர் அருகே உள்ள வங்கினகட்டே பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது பள்ளி மாணவி. இவர் கிரியாபூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஆனால், இரவு முழுவதும் சிறுமி வீடு திருமபாததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே, அன்றைய தினமே நள்ளிரவு நேரத்தில் ரயிலில் அடிபட்டு 2 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் காணாமல் போன 14 சிறுமி மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர் சந்தோஷ் என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து இறந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு மல்லேகவுடா மாவட்ட மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அஜ்ஜம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிறுமியும், 38 வயதான பள்ளி பேருந்து ஓட்டுநர் சந்தோஷும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சந்தோஷ் குறித்து சிறுமியின் பெற்றோர் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டனர். புத்தாண்டை கொண்டாட செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி, பேருந்து ஓட்டுநர் சந்தோஷுடன் ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில், விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.