மகள்களை கவ்விய சென்ற சிறுத்தை.. சண்டை போட்டு காப்பாற்றிய துணிச்சல் தந்தை.. குவியும் பாராட்டு!!

 
Gujarat

குஜராத்தில் சிறுத்தையுடன் சண்டை போட்டு தனது இரு மகள்களையும் தந்தை ஒருவர் காப்பாற்றிய துணிச்சலான சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோததரா மாவட்டத்தில் உள்ள தஹோத் பகுதியில் உள்ள புல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அங்கித் தாமோர். கூலித் தொழிலாளரான இவருக்கு, வர்ஷா மற்றும் காவ்யா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவம் நடந்த ஞாயிறு அதிகாலை வேளையில், இவர் தனது இரு மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார்.

இரவு வேலையில் இயற்கை உபாதை கழிக்க வீட்டை விட்டு வெளியே சென்று வந்த அங்கித் கதவை மூட மறந்து திறந்து வைத்தே தூங்கியுள்ளார். அதிகாலை மூன்று மணி வேளையில், திடீரென சிறுத்தை ஒன்று அவர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அப்போது தூங்கிக் கொண்டிருந்த 3 வயது மகளான வர்ஷாவை தனது வாயில் கவ்விக்கொண்டது. இதற்குள் தூங்கிக்கொண்டிருந்த அங்கித் விழித்துக்கொண்டார்.

Leopard

சிறுத்தை தனது மகளை பிடித்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கித், சமயோஜியதமாக கதவின் அருகில் நின்றார். தனது மகளை தூக்கிக் கொண்டு வெளியே ஓடிவிடக் கூடாது என்ற நோக்கில் அவர் செயல்பட, இதை பார்த்த சிறுத்தை வர்ஷாவை விடுவித்து மற்றொரு மகளான காவ்யாவை நோக்கி சென்றது.

சிறுத்தையை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் துரிதமாக செயல்பட்ட அவர், தனது வீட்டில் இருந்த ஒரு துணியை எடுத்து சிறுத்தையின் வாய் பகுதியை நோக்கி வீசி போக்கு காட்டியுள்ளார். இதை பார்த்து மிரண்ட சிறுத்தை காவ்யாவை விட்டு விலகி கதவு வழியாக வெளியேறி காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. இந்த சம்பவம் காரணமாக அங்கித்தின் இரு மகள்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. 

Gujarat

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அலுவலர்கள் அங்கித் மற்றும் அவரது மகள்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அங்கித்தின் சமோஜிதமான துணிச்சலான செயலை பாராட்டிய வனத்துறை அதிகாரி பிரசாந்த் தோமர், அவரை கௌரவித்தார். இந்த தகவல் அந்த கிராமத்தில் மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவிய நிலையில் அங்கித்தின் தீர செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

From around the web