கேமராவில் தெரிந்த இறந்த பெண்ணின் உருவம்.. ஏ.ஐ. கேமராவில் பதிந்த புகைப்படம்.. கேரளாவில் அதிர்ச்சி!
கேரளாவில் காரில் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதித்து அனுப்பப்பட்ட நோட்டீசில், டிரைவரின் பின்னால் ஏற்கனவே இறந்த பெண் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் சாலை விதிமீறலைக் கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தென் இந்தியாவில் இந்தத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலம் முழுவதும் சாலை விதிமீறலைக் கட்டுக்குள் கொண்டுவர சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், அதன் மூலம், சாலை விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அபராதம் குறித்த தகவலும், அது தொடர்பான புகைப்படமும் அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் டவுன் மேம்பாலத்தில், கடந்த மாதம் 3-ம் தேதி இரவு 8.27 மணியளவில், அந்த வழியாக காரில் சென்றவர்கள், சீட் பெல்ட் அணியவில்லை எனக் கூறப்படுகிறது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் விதிமீறல் தொடர்பாகப் பதிவான புகைப்படங்களின் அடிப்படையில், அந்த காரின் உரிமையாளர் ஆதித்யன் என்பவருக்கு, விதிமீறல் அபராதம் தொடர்பாக எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது.
அதையடுத்து, காரின் உரிமையாளர், அது தொடர்பான இணையதளத்துக்குச் சென்று, அபராதத் தொகையைச் செலுத்த முற்பட்டிருக்கிறார். அப்போது, விதிமீறல் தொடர்பான ஆதாரமாக இணைக்கப்பட்டிருந்த புகைப்படத்தைக் கண்டதும், அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். காரணம், அந்த காரின் முன்புற இருக்கையில் ஆண், பெண் இருவரும், பின்புற இருக்கையில் குழந்தைகள் இருவரும் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், போக்குவரத்துக் காவல்துறை மூலம் அனுப்பப்பட்ட Traffic AI கேமராவின் புகைப்படத்தில், பின்புற இருக்கையில் மர்மப் பெண் ஒருவரின் உருவம் பதிவாகியிருக்கிறது. தங்களுடன் அப்படி எந்தப் பெண்ணும் பயணிக்கவில்லை எனக் கூறும் காரின் உரிமையாளர், இது தொடர்பாக காவல்துறையில் புகாரும் அளித்திருக்கிறார்.
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கார் உரிமையாளர், “எங்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் எங்களுக்கு மிகுந்த மனவேதனையைத் தருகின்றன. அதைக் கட்டுப்படுத்த வேண்டும்” எனக் காவல்துறையில் அளித்த புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “அந்தப் புகைப்படம் கண்ணாடியின் பிரதிபலிப்பாக இருக்கலாம், அல்லது அந்தப் புகைப்படம் பிரின்ட் செய்யப்பட்டபோது, ஏதேனும் தவறு நடந்திருக்கலாம். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த மாயையான படம் வெளியாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இருப்பினும், கேமராவை நிறுவிய நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே இதற்கான சரியான காரணத்தைத் தெரிவிக்க முடியும்” எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.