10-ம் வகுப்பில் பெயில் ஆன மாப்பிள்ளை.. ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

 
Uttar Pradesh

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவர், தனக்குப் பார்த்த மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்ததற்காக திருமணத்தையே வேண்டாம் எனக் கூறியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் விழா.. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய நபரை கரம் பிடிக்க கூடிய நிகழ்வாக திருமணம் உள்ளது. இதனால், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கு வரக்கூடிய பார்ட்னர் எப்படி இருக்க வேண்டும்.. என்ன படித்து இருக்க வேண்டும் என்ற கனவுடன் மணமக்கள் இருப்பார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்ற மணமகன் அல்லது மணமகளை தேர்வு செய்து கொடுக்க பெற்றோரும் அதிக மெனக்கெடுவார்கள். எனினும், சில நேரத்தில் பொய்யை சொல்லி எப்படியாவது திருமணத்தை நடத்த முயற்சிக்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம்தான் உத்தர பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது. 

Marriage

உத்தரப்பிரதேசம் மாநிலம், சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்த்பாபாத் கலா கிராமத்தில் கடந்த நவம்பர் 17-ம் தேதி 28 வயது நிரம்பிய ஜெயமாலா என்ற பெண்ணுக்கும் டெல்லியில் கூலி வேலை செய்துவரும் 30 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த இளைஞரை திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என அந்த மணப்பெண் மறுத்துள்ளார்.

இதனால், திருமணம் நின்றுபோனது. விசாரணையில், மணமகன் வெறும் 10-ம் வகுப்பு மட்டுமே படித்திருந்ததாகத் தெரிகிறது. அதிலும் அவர் ஃபெயிலானதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இதனாலேயே அந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என மணப்பெண் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Police

மேலும், மணமகன் மனவளர்ச்சி குன்றியிருப்பதாகவும் மணப்பெண் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பும் மணமகளிடம் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. பின்னர் இந்த விவகாரம் போலீஸ் நிலையம் சென்றது. அவர்கள் மூலம் சமாதானம் பேசப்பட்டது. அந்த வகையில், திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை பெண் குடுமபத்தினரிடம் மணமகன் வீட்டார் திரும்ப ஒப்படைத்தனர். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web