எஜமானர் உயிரிழப்பு.. திரும்பி வருவர் என்ற நம்பிக்கையில் 4 மாதங்களாக காத்திருக்கும் நாய்! வைரல் வீடியோ

 
Kannur

கேரளாவில் உள்ள மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த எஜமானருக்காக நாய் பிணவறைக்கு முன்பாக காத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே கடந்த 4 மாதங்களாக ஒரு நாய் காத்து நிற்கிறது. முதலில் மருத்துவமனை ஊழியர்கள் அந்த நாயை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து பல நாட்களாக பிணவறை முன்பு அந்த நாய் நிற்பதை கண்ட ஊழியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்த நாயின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. மருத்துவமனையில் இறந்து பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்ட ஏதேனும் ஒரு நோயாளிதான் அந்த நாயின் உரிமையாளராக இருந்திருக்கலாம் என ஊழியர்கள் கருதுகின்றனர்.

Kannur

இதுகுறித்து மருத்துவமனையின் உதவியாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், நாங்கள் முதலில் நாய் மீது கவனம் செலுத்தவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களிலும் அது அங்கேயே தங்கி இருப்பதை கண்ட போது ஆச்சரியமாக இருந்தது.

ஆரம்ப நாட்களில் நாய்க்கு பிஸ்கட் மற்றும் உணவுகள் கொடுத்த போது சாப்பிட மறுத்தது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு பிஸ்கட் மற்றும் உணவுகளை சாப்பிட தொடங்கியது. ஆஸ்பத்திரிக்கு வந்து இறந்த நோயாளிகளில் ஒருவர் தான் இந்த நாயை வளர்த்திருக்க வேண்டும் என கருதுகிறோம்.


தனது எஜமானர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அந்த நாய் பிணவறை முன்பு காத்திருக்கிறது என நினைக்கிறோம். நாய் அடிக்கடி பிசியோதெரபி பிரிவு கட்டிடத்திற்கு சென்றாலும் இரவில் பிணவறை முன்பு வந்து விடுகிறது. மேலும் இந்த நாய் அந்த பகுதியில் உள்ள வேறு தெரு நாய்களுடன் சேரவில்லை என்றார். 

இந்த நாய்க்கு மருத்துவமனை டாக்டர் மாயா என்பவர் தனது வீட்டில் இருந்து சமைத்த உணவுகளை வழங்கி வருகிறார். அவர் அந்த நாய்க்கு ராமு என பெயரிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கண்ணூரை சேர்ந்த பெண் ஒருவர் இந்த நாயை தத்தெடுக்க மருத்துவமனையை அணுகி உள்ளதாக டாக்டர் மாயா கூறினார்.

From around the web