அத்தைக்கு அடுத்தடுத்து ஸ்கெட்ச் போட்ட மருமகள்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கர்நாடகாவில் நகை, பணத்திற்காக தனது அத்தையைக் கொலை செய்ய அடுத்தடுத்த முயற்சி செய்த மருமகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆர்எம்சி யார்டு காவல் நிலையம் அருகே வசிப்பவர் அன்னம்மா. குழந்தை இல்லாத இவர், வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறார். அத்துடன் சம்பாதித்த பணம், நகைகளை வீட்டில் வைத்திருந்தார். அன்னம்மாவின் அண்ணன் மகள் சுசித்ரா. இவர் அன்னம்மா வீட்டிற்கு அடிக்கடி வந்து போய் உள்ளார். அப்போது அன்னம்மா வீட்டில் பணம், நகைகள் இருப்பதைக் கண்டு கொள்ளையடிக்க திட்டமிட்டார். தனது இரண்டாவது கணவர் முனிராஜுடன் சேர்ந்து அன்னம்மாவை எப்படி கொலை செய்வது என்று திட்டமிட்டுள்ளார்.
கடந்த வாரம், கோர்குண்டே பால்யாவின் கல்லறை அருகே தனது அத்தை அன்னம்மாவை சுசித்ரா வரச்சொல்லியுள்ளார். அங்கு வந்த அன்னம்மாவை முனிராஜு தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியைக் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் அன்னம்மா மயங்கி விழுந்தார். இதனால் அவர் உயிரிழந்ததாக நினைத்த சுசித்ரா, முனிராஜு ஆகியோர், அன்னம்மா வீட்டில் இருந்த பணம், நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மயக்கம் தெளிந்த அன்னம்மா, சத்தம் போடவும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அன்னம்மா தற்போது உயிர் பிழைத்துள்ளார்.
இதுகுறித்து ஆர்எம்சி யார்டு போலீசில் அன்னம்மா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிய போது அவர்கள் தலைமறைவானது தெரிய வந்தது. ஹாசன் மாவட்டம், சகேலஷ்புராவில் அவர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சுசித்ரா மற்றும் அவரது இரண்டாவது கணவர்முனிராஜு ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அன்னம்மாவை ஏற்கெனவே கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டது தெரிய வந்தது. இதற்காக தங்களது 15 வயது மகனை அன்னம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். உறங்கிக் கொண்டிருந்த அன்னம்மா முகத்தில் தலையணை கொண்டு சுசித்ராவின் 15 வயது மகன் அழுத்தியுள்ளார்.
அப்போது அன்னம்மா சுதாரித்துக் கொள்ளவும், முகத்தில் அமர்ந்திருந்த கரப்பான் பூச்சியை தலையணைக் கொண்டு அடித்தேன் என்று சுசித்ராவின் மகன் சொல்லி தப்பியது தற்போது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் எங்கு நகை, பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அவர்களின் 15 வயது மகனையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். நகை, பணத்திற்காக அத்தையை மருமகள் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.