காதலை கைவிட மறுத்த மகள்.. மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற தந்தை.. உ.பியில் நடந்த ஆணவக் கொலை!

 
UP

உத்தர பிரதேசத்தில் மகள் மற்றும் அவரது காதலனை தந்தை ஒருவர் ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் நீத்து (20). இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த சச்சின் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரிந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களது காதலை பிரிக்கப் பல முறை முயற்சி செய்தும் முடியவில்லை. இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலே காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

Shovel

இந்த நிலையில் இன்று அதிகாலை, நீத்துவும் சச்சினும் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வெளியே வந்த நீத்துவின் தந்தை இவர்களைப் பார்த்து சத்தம் போட்டுள்ளார். பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்த அனைவரும் காதலர்கள் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து காதலர்கள் இருவரையும் நீத்துவின் தந்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து ரத்தம் வழியும் மண்வெட்டியுடன் காவல் நிலையத்திற்கு சென்று மகேஷ் சரணடைந்தார்.

UP

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆணவக்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் காதலர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web