கால்வாயில் விழுந்து நொறுங்கிய கார்.. 3 பேர் பலி.. ஜெயிலர் படம் பார்த்துவிட்டு திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்!!

 
Karaikal

காரைக்காலில் ஜெயிலர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது பைக் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண், சரவணன், கணபதி (25), வாசிம் முசரப் (22). இவர்கள் காரைக்கால் அடுத்த தமிழ்நாடு பகுதியான மயிலாடுதுறைக்கு காரில் ‘ஜெயிலர்’ திரைப்படம் பார்ப்பதற்காக சென்றனர். திரைப்படம் பார்த்துவிட்டு காரில் காரைக்காலில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பினர்.

Accident

இன்று காலை காரைக்கால் கோட்டுச்சேரி அருகே கார் வந்தபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அருகில் இருந்த வாய்காலில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் வந்த கணபதி, வாசிம் முசரப் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனே இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காரில் சிக்கிகொண்டு படுகாயம் அடைந்த அருண், சரவணனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Karaikal PS

விபத்தில் உயிரிழந்த கணபதி, வாசிம் முசரப், செல்வம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web