பிளாட்பார்ம் மீது ஏறிய பேருந்து.. நடத்துநர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி.. ஆந்திராவில் சோகம்!
ஆந்திரத்தில் பிரேக் பழுதாகி நடைமேடையின் மீது பேருந்து மோதி 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா பேருந்து நிலையத்திற்கு இன்று காலை 8.20 மணிக்கு பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்று நடைமேடையின் மீது ஏறியது. பேருந்தின் பிரேக் பழுதானதால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நடைமேடையின் மீது ஏறியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
உள்ளூர் ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, “விபத்தில் சிக்கிய பேருந்து விஜயவாடாவில் இருந்து குண்டூருக்கு செல்ல இருந்ததாகவும், பேருந்து நிலையத்தில் வாகனத்தை பின்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக ஓட்டுநர் முன்னோக்கி நகர்த்தியதால் நடைமேடை மீது பேருந்து ஏறியதாக மண்டல மேலாளர் எம்.யேசு தானம் தெரிவித்தார்” என கூறப்பட்டுள்ளது.
விஜயவாடா பேருந்து நிலையத்தில் நடைமேடை எண் 12ல் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. காலை 8.20 மணியளவில் நடந்ததாகவும், பேருந்து மோதியதில் அந்த இடம் சிறிது சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக விஜயவாடா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Vijayawada bus accident breaking news😳#Vijayawada pic.twitter.com/XctDck8Ak4
— Learn To Live Hindi (@ToHindi78349) November 6, 2023
இந்த விபத்தில் அரசு பேருந்து நடத்துனர் வீரய்யா, பேருந்துக்காக காத்திருந்த குமாரி, சிறுவன் அயான்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.