திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து.. வாக்குப்பதிவு எந்திரங்கள் நாசம்.. மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

 
Madhya Pradesh

மத்திய பிரதேசத்தில் நேற்று நடந்த வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19-ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று (மே 7) 3-ம் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

Madhya Pradesh

நேற்று நடைபெற்ற 3-வது கட்ட தேர்தலில் உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஷ்கார், கோவா, மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. வாக்குப்பதிவு நடைபெற்ற 93 தொகுதிகளில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள கோலா கிராமத்தில் வாக்குகள் பதிவான எந்திரங்களை ஊழியர்கள் பேருந்து மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் திடீரென அவர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பேருந்தில் இருந்து அனைவரும் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


ஆனால் பேருந்தில் இருந்த 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடித்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web