தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை தவிர்த்த மணமகள்.. ஷாக்கான மணமகன் வீட்டார்! வைரல் வீடியோ
கர்நாடகாவில் தாலி கட்டும் நேரத்தில் தனது திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சிக்கபயலாடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கு அவரது குடும்பத்தினர் பெண் தேடி வந்துள்ளனர். அப்போது திப்பாரெட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்களது இளம் மகளான ஐஸ்வர்யா என்பவரை மஞ்சுநாத்தின் குடும்பத்தினருக்கு பிடித்து போகவே, இவர்களது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
அப்போது இந்த இளம்பெண் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் அவரது பெற்றோர், இவரை திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளனர். அதன்படி மஞ்சுநாத் - ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று, 7-ம் தேதி (நேற்றைய தினம்) திருமணம் நடைபெற இருந்தது.
மேலும் நேற்று முன்தினம் (டிச. 6) இவர்களுக்கு பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று திருமணத்திற்கு தேவையான அனைத்து சடங்குகளும் நடைபெற்று முடிந்த நிலையில், மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்றார். அப்போது அவரது கையை பிடித்துக் கொண்டு தனக்கு திருமணம் வேண்டாம் என்று அழுதுள்ளார் ஐஸ்வர்யா.
இதனை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் மிரண்டு போய் நின்று பார்த்தனர். தொடர்ந்து மணமகள் ஐஸ்வர்யாவை, அவரது குடும்பத்தினர் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் தனக்கு திருமணம் வேண்டாம் என்று அடம்பிடித்துள்ளார். இதனால் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து மணமகன் வீட்டார் இந்த நிகழ்வு குறித்து போலிசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது மணமகள் ஐஸ்வர்யா, தனது மேற்படிப்புக்காக திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
நெறையா கேள்விகள் மனசுல ஓடுது… pic.twitter.com/pPNuUUkD8C
— s!d ✨ (@SidTweep) December 8, 2023
இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. மணமகள் ஐஸ்வர்யா இந்த விவகாரம் குறித்து மணமகனிடம் முன்பே தெரிவித்திருந்தாரா என்று தெரியவில்லை, எனினும் இந்த நிகழ்வு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படிப்பிற்காக தனது திருமணத்தை நிறுத்திய மணமகளின் செயல் தற்போது அனைவர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஐஸ்வர்யாவின் மேற்படிப்புக்காக மணமகன் வீட்டார், ரூ.50 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளதாகவும், திருமணத்திற்கு முன்பே இதுகுறித்த பேச்சுவார்த்தை முடிந்ததாகவும், பின்னரே திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும் மணமகன் மஞ்சுநாத்தின் குடும்பத்தார் போலிசிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மணமகன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடாக கொடுப்பதாக மணமகள் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.