பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு இருந்த இளம்பெண் சடலம்.. டெல்லியை அதிரவைத்த கொலை சம்பவம்!
டெல்லியில் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவரை சங்கிலியால் கை, கால்களை கட்டி சித்ரவதை செய்து, கொடூர கொலை செய்ததுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு டெல்லியின் திலக் நபர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் சுவர் அருகே பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் சடலமாக மீட்கப்பட்ட 30 வயதுடைய அந்த பெண் வெளிநாட்டை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டது. உடலில் சித்ரவதை செய்த அடையாளங்கள் இருந்தன. அந்த பெண்ணின் உடலில் தீயால் சுட்ட காயங்கள் உள்ளன. இதனால், மனித கடத்தலுக்கான சாத்தியம் உள்ளது என போலீசார் சந்தேகித்தனர். அவருடைய கண்கள் பிதுங்கி காணப்பட்டன. இதனால், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது.
ஒற்றை ஆடையுடன், குட்டை கவுன் அணிந்தபடி காணப்பட்டார். அவருடைய கை, கால்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு, பூட்டு போடப்பட்டு இருந்தன. உடலின் மேல்பகுதி ஒரு பெரிய, கருப்பு நிற பாலித்தீன் பையால் சுற்றப்பட்டு இருந்தது. வெள்ளை நிற சான்ட்ரோ கார் உதவியுடன் அவருடைய உடல் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானாரா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சிசிடிவி கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடும் பணி நடந்தது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் குர்பிரீத் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம்பெண் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் நகரை சேர்ந்தவர். அவரை சுவிட்சர்லாந்தில் வைத்து குர்பிரீத் சந்தித்துள்ளார்.
சம்பவத்தன்று, அவருடைய கை, கால்களை கட்டி போட்டு பின்னர் கொலை செய்துள்ளார். பழைய கார் ஒன்றை வாங்கி, அந்த உடலை அதில் போட்டு வைத்திருக்கிறார். அழுகிய நாற்றம் வந்ததும், சாலையோரம் உடலை வீசி விட்டு, தப்பி விட்டார். குர்பிரீத்திடம் இருந்து ரூ.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என டெல்லி மேற்கு போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.