வீட்டின் கழிவறை வாளியில் கிடந்த பிஞ்சு குழந்தை.. விட்டு விட்டு மருத்துவமனை சென்ற தாய்!!

கேரளாவில் பெற்ற குழந்தையை வீட்டின் கழிவறை வாளிக்குள் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற இளம்பெண்ணின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த சூழலில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே, ரத்த போக்கும் ஏற்பட்டு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை இறந்துவிட்டதாக எண்ணிய அந்த பெண், அதனை கழிவறையில் உள்ள வாளியில் போட்டுள்ளார்.
பின்னர் குழந்தை பிறந்ததற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டதால் அந்த பெண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே சிகிச்சை பெற்று வந்தபோது, தனக்கு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை இறந்து விட்டதால் கழிவறையில் வீசியதாகவும் மருத்துவமனையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் கொடுத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார், அங்கே கழிவறையில் பக்கெட்டில் இருந்த குழந்தையை பார்த்துள்ளனர். அப்போது அதற்கு உயிர் இருந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பிஞ்சு குழந்தையை பக்கெட்டுடனே தூக்கி கொண்டு மருத்துவமனை வரை ஓடினர்.
பின்னர் அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அந்த குழந்தைக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த பெண் இந்த குழந்தையை முறையற்ற முறையில் பெற்றெடுத்து அதனை வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
#Kerala police today with their timely intervention saved the life of a new born baby abandoned by the mother in a bucket inside the bathroom. What you see is #police rushing to the hospital after realising the baby is alive. The #baby is currently in the ICU.#Police #Kerala pic.twitter.com/Dvo2hSxxjj
— Shibimol K G (@KGShibimol) April 4, 2023
தொடர்ந்து அந்த குழந்தை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பெண் யார், அவருக்கு திருமணமானதா அல்லது காதல் மூலம் பிறந்த குழந்தையா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற குழந்தையை வீட்டின் கழிவறை வாளிக்குள் வைத்து விட்டு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கழிவறை வாளிக்குள் வைக்கப்பட்டிருந்த பிறந்த சில நிமிடங்களே ஆன உயிரோடு இருந்த குழந்தையை போலீசார் உடனடியாக மீட்டு நெடுந்தூரம் ஓடி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ள போலீசாரின் செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.