முட்புதரில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்
ஆந்திராவில் முட்புதர்களில் நிர்வாண நிலையில் இளம்பெண் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள எப்ருபாலம் கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், இயற்கை உபாதையை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ரயில்பாதைக்கு சென்றுள்ளார். காலை 5.30 மணிக்கு சென்ற அவர், வெகுநேரமாகியும் திரும்ப வராததால் குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளி அருகே முட்புதர்களில் நிர்வாண நிலையில் அப்பெண்ணின் சடலம் கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளியை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் என்றும், குற்றவாளிகளை 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.