பணியில் சேர்ந்த 4 மாதத்திலேயே இளம்பெண் மரணம்.. பணிச்சுமையால் உயிரிழந்த சோகம்!
பணியில் சேர்ந்த 4 மாதத்திலேயே பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்னா செபாஸ்டியன் பேராயில். 26 வயதுடைய இவர், சிஏ முடித்துள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் புனேவில் அமைந்துள்ள எர்ன்ஸ்ட்& யங் (EY Pune) என்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். தனது முதல் வேலை என்பதால், மிகவும் ஆர்வமாக பணியில் சேர்ந்த இவர், வெறும் 4 மாதங்களில் பணிச்சுமையால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் அன்னா செபாஸ்டியனின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது தனது மகள் உயிரிழப்புக்கு காரணமான EY நிறுவனத்துக்கு தாய் அனிதா அகஸ்டின் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை EY நிறுவனத்தின் இந்திய தலைவர் ராஜீவ் மேமானிக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தனது மகள் அன்னா செபாஸ்டியன் பேராயில், கடந்த 2023-ம் ஆண்டு CA தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் புனேவில் அமைந்துள்ள EY நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இது அவளுடைய முதல் வேலை என்பதால், அவள் தன்மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இரவு - பகல், வார இறுதி என எதுவும் பாராமல் அயராது உழைத்தாள்.
ஆனால் இதுவே அவருக்கு மன அளவிலும், உடலளவிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே அவர் இதையெல்லாம் அனுபவிக்க தொடங்கியுள்ளார். இருப்பினும் தனது வெற்றியை நோக்கிதான், தான் பயணிப்பதாக அவர் எண்ணி இவையனைத்தையும் செய்தார். இந்த நிறுவனத்தில் தனது மகள் அன்னா செபஸ்டியன் ஒரு குழுவுடன் சேர்ந்து பணிபுரிந்தார்.
ஆனால் அவர் அங்கே சேர்ந்த உடனே, அதிக பணிச்சுமை காரணமாக பலரும் பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையெல்லாம் கேட்டு அவர் பயப்படக்கூடாது என்பதற்காக, அந்த குழுவின் தலைவர் ‘அன்னா, நீங்கள் எங்கள் அணியைப் பற்றி அனைவரின் கருத்தையும் மாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார். அதற்கு அவர் தனது உயிரையே கொடுப்பாள் என்று யாரும் நினைக்கவில்லை.
அன்னாவின் குழுத் தலைவர் அடிக்கடி கூட்டங்களை மாற்றியமைப்பதால், இறுதிநாளில் சக பணியாளர்களின் வேலையை ஒதுக்குவார். இது அன்னாவின் மன அழுத்தத்தை அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ வேலையைத் தாண்டி, வாய்மொழியாக ஒதுக்கப்பட்ட பணிகளையும் செய்ய கூறுவதாக அன்னா கவலையுடன் எங்களிடம் கூறினார்.
அப்போது இந்த வேலையை விட்டுவிடு என்று நான் அறிவுறுத்தினேன். ஆனால் அவரோ இது தனக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்று கருதி பணியில் நீடித்தாள். அனைத்து நேரங்களிலும் அன்னா தனது பணியில்தான் கவனம் செலுத்தினார். ஒருமுறை அவரது குழுத் தலைவர், இரவு நேரத்தில் அவரை தொடர்புக் கொண்டு திடீரென பணியை கொடுத்தார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அன்னா கூறியும், அவர் அதை பொருட்படுத்தவில்லை. ‘நீங்கள் இரவில் வேலை செய்யலாம், நாங்கள் அனைவரும் அதைத்தான் செய்கிறோம்' என்று அலட்சியமாக கூறியுள்ளார்.
எனது மகளின் இறுதிச் சடங்கில் நிறுவன தலைமை முதல் ஊழியர்கள் வரை யாரும் வரவில்லை. எனது மகளின் மரணம் நிறுவனத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாக செயல்பட வேண்டும். உங்கள் நிறுவனத்தில் உள்ள பணி கலாச்சாரத்தைப் பற்றி சிந்திக்கவும், உங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது.
எனது மகள் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் இதயம் சார்ந்த பிரச்னை இருப்பதாக கூறினார். அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவருக்கு அனைத்தும் நலமாக இருப்பதாகவும், ஓய்வு தேவை என்றும் கூறினார். எனினும் தனக்கு விடுமுறை கிடைக்காது என்றும், வேலை இருப்பதாகவும் அன்னா ஓய்வு கூட எடுக்காமல் பணிக்கு சென்றார்.
அன்று இரவு கூட தாமதமாகதான் அறைக்கு திரும்பினார். ஜூலை 7 அன்று நடைபெற்ற அவரது பட்டமளிப்பு விழாவின்போதும் அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் நாங்கள் தாமதமாகதான் சென்றோம். இது நடந்து சில நாட்களில் அவரது உடல்நிலை மேலும் மோசமானது. தொடர்ந்து பணிச்சுமை காரணமாக சரியான ஓய்வு, உணவு என எதுவும் இல்லாமல் இருந்ததால், கடந்த ஜூலை 20-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
எனது மகளின் மரணம், உண்மையான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் அனுபவிக்கும் துயரத்தையும் அதிர்ச்சியையும் வேறு எந்த குடும்பமும் அனுபவிக்கக்கூடாது. எனது மகள் அன்னா இப்போது எங்களுடன் இல்லை. ஆனால் அவரது கதை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்று அந்த கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.