இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்!

 
Karnataka

கர்நாடகாவில் செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் நெலமங்களா தாலுகா திப்பகொன்டனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயண். இவரது மனைவி சுதா. இந்த தம்பதிக்கு லிகிதா (18) என்ற மகள் இருந்தார். இவர் தினமும் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக லிகிதாவை அவரது பெற்றோர் கண்டித்தனர். எனினும் அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் செயல்பாட்டில் இருந்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இதுதொடர்பாக பெற்றோர், லிகிதாவை அழைத்து கண்டித்துள்ளனர். அப்போது செல்போனை எடுப்பதை தவிர்க்கும்படியும், புத்தகத்தை எடுத்து படிக்கும்படியும் கூறி உள்ளனர். இதனால் மனமுடைந்த லிகிதா, தனது அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனே அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது லிகிதா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதற்கிடையே அந்த பகுதியினர் நெலமங்களா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், லிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து, லிகிதா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web