செருப்பை வெளியே கழற்றி விட்டு வரவும்.. மருத்துவருக்கு அடி உதை.. வைரல் வீடியோ

 
Gujarat

குஜராத்தில் செருப்பை கழற்ற கூறிய டாக்டரை தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் பவ்நகர் பகுதியில் சிஹோர் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், அவசர சிகிச்சை பிரிவில் பெண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு தலையில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த அறையில் பெண்ணின் உறவினர்கள் சிலர் செருப்புகளை அணிந்தபடி உள்ளே சென்றுள்ளனர். அப்போது அறைக்குள் வந்த டாக்டர் ஜெய்தீப் சின்ஹ கோகில், அவர்களிடம் செருப்புகளை வெளியே கழற்றி விட்டு, உள்ளே வரவும் என கூறியுள்ளார்.

Gujarat

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெண்ணின் உறவினர்கள் சேர்ந்து ஆத்திரத்தில் டாக்டரை கீழே தள்ளி, அடித்தும், மிதித்தும் உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்து படுக்கையில் இருந்த பெண் மற்றும் செவிலியர் அவர்களை தடுக்க சென்றனர்.

இந்த சண்டையில் அந்த அறையில் இருந்த மருந்து பொருட்கள் மற்றும் பிற சாதனங்களும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில், ஹிரேன் தங்கர், பவ்தீப் தங்கர் மற்றும் கவுசிக் குவடியா ஆகிய 3 பேரை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். அந்த அறையில் இருந்த சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.


மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ம் தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், டாக்டருக்கு எதிரான தாக்குதல் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

From around the web