காதல் மனைவி நடத்தையில் சந்தேகம்.. அடித்தே கொன்ற கணவர்.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்

 
Puducherry

புதுச்சேரியில் காதல் மனைவியை கணவர் அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் பிரதீப். சுப நிகழ்ச்சி ஒன்றிற்காக புகைப்படம் எடுக்க தர்மபுரிக்கு சென்றபோது அங்கு ஸ்டூடியோவில் பணியாற்றிய அபூர்வாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகிய இருவரும் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். கடந்த 2023 அக்டோபர் மாதம் பதிவு திருமணமும் செய்து கொண்டனர். முறைப்படி திருமணம் நடக்கும் வரை பதிவு திருமணத்தை வெளியே தெரிவிக்காமல் இருக்கலாம் என பேசி முடிவெடுத்தனர்.

அன்றிலிருந்து வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வந்து பிரதீப்புடன் சின்ன சுப்புராயபிள்ளை வீதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் அபூர்வா. கடந்த 19-ம் தேதி அபூர்வா புதுச்சேரிக்கு வந்து தனது கணவர் பிரதீப் உடன் வழக்கமாக தங்கும் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.

Murder

மறுநாள் 20-ம் தேதி இரவு பிரதீப், அபூர்வாவை தோளில் சுமந்தபடி மாடி அறையிலிருந்து கீழே வந்துள்ளார். அப்போது விடுதியில் பணியில் இருந்த கார்த்திக் என்பவர் பிரதீப்பிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளார். அதற்கு தன் மனைவி மயங்கி விட்டதாகவும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அவரது முகத்தை பார்த்தபோது முகம் முழுவதும் காயம் ஏற்பட்டு வீங்கிய நிலையில் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர், இருவரையும் ஆட்டோவில் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பெரியக் கடை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனை சென்று பார்த்த போலீசார் அபூர்வா மீது கொடூர தாக்குதல் நடத்தியிருப்பதை உணர்ந்தனர். விசாரணை எனக்கூறி பிரதீப்பை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் காதல் மனைவியை ஆக்ரோஷமாக தாக்கியதாக கூறி பிரதீப் அதிர்ச்சி தகவல் கொடுத்தார்.

Grand Bazar PS

வேறொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு தனக்கு துரோகம் செய்ததால் ஆக்ரோஷமாக தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து விடுதி மேலாளரிடம் புகார் பெற்ற போலீசார் பிரதீப் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கடந்த 21-ம் தேதி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபூர்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சிறையில் உள்ள பிரதீப்பை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை கணவர் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web