திடீரென வந்த ரயில்.. 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி.. செல்பி எடுத்தபோது நடந்த விபரீதம்!

 
Rajasthan

ராஜஸ்தானில் ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த தம்பதி 90 அடி பள்ளத்தில் கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல்மேவாடா. இவரது மனைவி ஜான்வி. இந்த நிலையில், ராகுல் தனது மனைவியுடன் கோரம்காட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். தம்பதியின் அருகில் இருந்தவர்களும் அங்குள்ள அழகிய காட்சிகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பாலத்தின் அருகே ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த தம்பதிக்கு விலகி நிற்கவோ, மறுமுனையை அடையவோ நேரம் இல்லை. இதனை அறிந்த தம்பதி, ரயிலின் மீது மோதுவதை விட கீழே குதித்துவிடலாம் என எண்ணி 90 அடி பள்ளத்தில் கீழே குதித்தனர்.

Rajasthan

இதை கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். தண்டவாளத்தில் ஆட்கள் நிற்பதை அறிந்த ஓட்டுநர், உடனடியாக அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை உடனடியாக நிறுத்தினார். எனினும், உயிர் பயத்தில் கீழே விழுந்ததில் இருவருக்கும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

ராகுலின் உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நேரத்தில் ஜான்விக்கு கால் முறிவு ஏற்பட்டதுடன், முதுகுத்தண்டு பகுதியிலும் காயம் ஏற்பட்டது. அவர் பாலியில் உள்ள பங்கார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்கவும், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

From around the web