திடீரென பாலத்தின் நடுவில் யு-டர்ன் எடுத்த இ-ரிக்சா.. பைக்கில் வந்தவருக்கு நேர்ந்த சோகம்
உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு பாலத்தின் நடுவில் திடீரென யு-டர்ன் எடுத்த இ-ரிக்ஷா மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் நேற்று காலையில் வழக்கம்போல் போக்குவரத்து பிசியாக இருந்தது. அப்போது பாலத்தின் நடுப்பகுதியில் ஒரு இ-ரிக்சா திடீரென யு-டர்ன் எடுத்தது. பின்னால் வந்த ஒரு பைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இ-ரிக்சா மீது மோதியது.
பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இதனால் பயந்துபோன இ-ரிக்சா டிரைவர் வேகமாக வாகனத்தை இயக்கி தப்பிச் சென்றார். உயிருக்குப் போராடிய இளைஞரை சக பயணிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவரின் பெயர் ஆகாஷ் சிங் என்பதும் வேலைக்கு செல்லும்போது விபத்தில் இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான இ-ரிக்சா டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
Video: Biker Dies After E-Rickshaw Ahead Takes Sudden U-Turn On Bridge https://t.co/Lb5rYkV50G pic.twitter.com/kGUVnDaab2
— NDTV (@ndtv) April 28, 2024
இ-ரிக்சாக்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவர்களால் சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவர்கள் எதிர்க்கும் போது மற்றவர்களுக்கு எதிராக கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.