ஜம்மு காஷ்மீரில் திடீர் வெள்ளம்.. ரோந்துப்பணியின் போது ஆற்றை கடந்த 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

ரோந்துப்பணியில் ஆற்றை கடக்கும்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் பெய்த கனமழையால் போஷானா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 2 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீரர்களைக் கண்டுபிடிக்க ராணுவம், போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரின் (SDRF) கூட்டு முயற்சிகளில் ஈடுப்பட்டனர். எனினும், இரு ராணுவ வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இரு வீரர்களும் சூரன்கோட் பகுதியில் உள்ள போஷானா என்ற இடத்தில் டோக்ரா எல்லையை கடந்து கொண்டிருந்தபோது, கனமழையால் திரண்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் சுபேதார் குல்தீப் சிங்கின் உடல் நேற்று இரவு ஓடையில் இருந்து மீட்கப்பட்டது.
இந்த நிலையில், சிப்பாய் தெலு ராமின் உடல் இன்று மீட்கப்பட்டது. இருவரின் உயிர் தியாகத்திற்கு அனைத்து வீரர்களும் மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.