ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்த சு.வெங்கடேசன் எம்.பி!!

 
su venkatesan

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை , மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன்,

“ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகள்  எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடியது. ஒன்றிய நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்களை சந்தித்து  சு. வெங்கடேசன் எம் பி மனு. நகைக்கடன் பெறுவது சம்பந்தமாக ரிசர்வு வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

நகைக்கடன் பெறும் போது “கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்” என ரிசர்வு வங்கியின் புதிய நிபந்தனை கூறுகிறது. பெரும்பாலான நகைக் கடன்தாரர்கள் தினக்கூலிகளாக, நிலையான மாதச் சம்பளம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வருமானத்திற்கான ஆவணச் சான்றை காண்பிப்பது என்பது இயலாததாகும். அதுமட்டுமல்ல நகைக் கடனை பொறுத்தவரையில் அது 100% பாதுகாக்கப்பட்ட கடன் ஆகும்.

ஆகவே கடன் தாரரின் திரும்பச் செலுத்தும் திறனை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? அடுத்ததாக “தங்க நகையின் மீதான மூல ரசீதோ அல்லது உடமை உரிமை ஆவணமோ அவசியம் என்கிறது” புதிய விதிமுறை. தங்க நகைகள் என்பது பல பத்தாண்டுகளாகவோ அல்லது இரண்டு மூன்று தலைமுறையாகவோ இருந்து வரும் நிலையில் மூல ரசீதுக்கோ அல்லது உடமை உரிமை ஆவணமோ பெறுவது எளிதல்ல. நகைக்கடன் என்பது எளிய, நடுத்தர மக்கள் கடன் பெறுவதற்கான கடைசி புகலிடமாகும்.

வங்கிகளைப் பொறுத்த வரை நூறு சதவிகிதம் லாபம் ஈட்டுதல் மட்டுமல்ல வராக்கடன் என்கிற பிரச்சனையே இதில் இல்லை. அப்படி இருக்கும் சூழலில் நகைக்கடன் மீது புதிதாக இவ்வளவு கடுமையான விதிமுறைகளை ரிசர்வு வங்கி ஏன் விதித்துள்ளது. ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் கருத்துகள் பெறுவதற்கான நகல் என்று சொல்லிவிட்டு, அடுத்த பாராவில் “இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது. வங்கிகளை பொறுத்தவரை நூறு சதவிகித பாதுகாப்பானது, வராக்கடன் என்பது துளியும் இல்லாத ஒன்று நகைக்கடன். அ

தனால் தான் இது சம்பந்தமாக வங்கிகளிடமிருந்து எந்த புகாரும் இல்லை. அது மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகையின் விலை கூடிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை. அப்படியிருக்கும் சூழலில் நகைக்கடன் சார்ந்து இவ்வளவு கடுமையான விதிமுறைகளை, அவசர அவசரமாக ரிசர்வு வங்கி விதிப்பதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.

கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கு எதிரானதாக உள்ள ரிசர்வு வங்கியின் நகைக்கடன் தொடர்பான புதிய நிபந்தனைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கீழ்க்கண்ட மனுவினை அளித்தேன். மனுவில் உள்ள விபரங்களை கேட்டறிந்த நிதியமைச்சர் இதன் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

From around the web