ராகிங் கொடுமையால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. துணைவேந்தர் சஸ்பெண்ட்.. கேரள ஆளுநர் அதிரடி

 
Kerala Kerala

கேரளாவில் ராக்கிங் கொடுமையால் 2-ம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூக்கோடு பகுதியில் கேரளா கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சித்தார்த்தன் என்ற மாணவர் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த பிப்ரவரி 18-ம் தேதி அவர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கல்லூரியில் சித்தார்த்தனை சில மாணவர்கள் கடுமையான ராகிங் கொடுமைக்கு உட்படுத்தியதாக தெரியவந்தது.

குறிப்பாக சுமார் 24 மணி நேரத்திற்கு மேலாக உணவு எதுவும் கொடுக்காமல், 3 நாட்களுக்கும் மேலாக சித்தார்த்தனை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவர்கள் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சித்தார்த்தனை நிர்வாணப்படுத்தி பல்கலைக்கழக விடுதி முழுவதும் நடக்கச் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளில் எஸ்.எஃப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சைகள் நிலவி வருகிறது.

Ragging

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சிஞ்சோ ஜான்சன் உட்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் சிஞ்சோ, சித்தார்த்தனின் பெற்றோர் உட்பட சாட்சிகளை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சித்தார்த்தனின் வீட்டிற்கு நேரடியாக சென்று கேரளா மாநில ஆளுநர் ஆரிஃப் கான், ஆறுதல் தெரிவித்திருந்தார். இதனிடையே தற்போது அதிரடி நடவடிக்கையாக பல்கலைக்கழக துணைவேந்தரான சசீந்திரநாத்தை இடை நீக்கம் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக துணைவேந்தரை பணியிடை நீக்கம் செய்ய பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. குற்றச்சாட்டு ஏதேனும் எழுந்தால், அது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் பெறப்பட்டு பின்னரே இடைநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் நேரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது, அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suicide

ஆளுநர் அனுப்பியுள்ள இடைநீக்க உத்தரவில், துணைவேந்தர் சசீந்தரநாத் அளித்துள்ள அறிக்கை அவரது பணிகளை முழுமையாக செய்யவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் பணியில் இருக்கும் நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கை கேரள மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web