2 வயது பெண் குழந்தையைக் கடித்துக் கொன்ற தெருநாய்கள்.. டெல்லியில் பயங்கரம்

 
Delhi

டெல்லியில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியின் துக்ளக் லேன் பகுதியைச் சேர்ந்த குழந்தை திவ்யான்ஷி. கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் குழந்தை திவ்யான்ஷி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் திடீரென குழந்தையை தாக்கிக் கடித்து குதறியுள்ளன. 5 நாய்கள் சுமார் 100 முதல் 150 மீட்டர் வரை குழந்தையை இழுத்துச் சென்றுள்ளன.

குழந்தையின் அழுகுரலை கேட்டு வெளியில் வந்த பெற்றோர், தெருநாய்களிடம் இருந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று மாலை உயிரிழந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Dogs

மனிதர்களை தெருநாய்கள் கடித்துக் குதறுவது இது முதல் முறை அல்ல என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தெரு நாய்களுக்கு தொடர்ந்து உணவளித்து வந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி கால்நடை மருத்துவர்கள், அங்கிருந்த நாய்களை பரிசோதனை செய்த போது அவற்றுக்கு ரேபிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர். இருந்தபோதும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Delhi police

நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் எழுப்பியுள்ள நிலையில், தலைநகர் டெல்லியிலேயே குழந்தை ஒன்று தெரு நாய்கள் கடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web