சிஐஎஸ்எப் வீரரை கன்னத்தில் அறைந்த ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர்.. வெளியான அதிர்ச்சி காரணம்

 
Rajasthan Rajasthan

ராஜஸ்தானில் பாதுகாப்பு சோதனையின் போது ஏற்பட்ட தகராறில் சிஐஎஸ்எப் வீரரை ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் அனுராதா ராணி என்பவர், நேற்று அதிகாலை 4 மணியளவில் மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது, ஒரு கேட் வழியாக நுழைவதற்கு உரிய அனுமதி இல்லாததால், சிஐஎஸ்எப் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத், அவரை தடுத்து நிறுத்தினார்.

அப்போது, அருகிலுள்ள நுழைவாயிலில் விமான ஊழியருக்கான சோதனையை மேற்கொள்ளுமாறு அனுராதா கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் பெண் சிஐஎஸ்எப் ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை. உதவி சப்-இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு சோதனையை மேற்கொள்ள, ஒரு பெண் ஊழியரை அழைத்தார்.

Rajasthan

ஆனால் அதற்குள் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக, விமான ஊழியர் அனுராதா, உதவி சப் இன்ஸ்பெக்டரை அறைந்தார். இதுகுறித்து பெண் ஊழியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் ஊழியரிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. சிஐஎஸ்எப் பணியாளர், பணி நேரம் முடிந்ததும் தன் வீட்டிற்கு வருமாறு பெண் ஊழியரிடம் தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை கூறியுள்ளார்.


எங்களது பெண் ஊழியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான இந்த கடுமையான சம்பவத்தில், உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உள்ளூர் காவல்துறையை அணுகியுள்ளது. நாங்கள் எங்கள் பணியாளருடன் உறுதியாக நிற்கிறோம், அவருக்கு முழு ஆதரவை வழங்க உறுதிபூண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

From around the web