துணை குடியரசுத் தலைவர் போட்டியில் வைகோவுக்குப் பதில் சிவா? இது தான் காரணமா இருக்குமோ?
மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்றத்தில் பழுத்த அனுபவம் பெற்றவருமான மதிமுக தலைவர் வைகோ, இந்தியா கூட்டணி சார்பில் துணைக் குடியரசுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கருதப்பட்ட நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக தலைவருமான திருச்சி சிவா பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்கள் திருச்சி சிவாவிடமே கேள்விகளை எழுப்பிய போது, எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பற்றிய முடிவை எடுப்பார்கள். நான் கருத்து சொல்லக்கூடாது என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.
கோவையைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை களத்தில் இறக்கியதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இக்கட்டான சூழலை உருவாக்கியதாக பாஜக தரப்பினர் கருதுகின்றனர். எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழருக்கு வாக்களிக்காமல் வேறு மொழிக்காரருக்கு வாக்களிப்பதா என்ற குற்றச்சாட்டு, திமுக அணியின் 40 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாம்ல் திமுக அணியின் தலைவரும் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவருமான முதலமைச்சர் மீதும் வைக்கப்படும் என்பதால் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவருக்கே இந்த வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று இந்தியா அணியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வைகோ தான் சரியான தேர்வாக இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளுக்கு வைகோவின் வெளிப்படையான ஆதரவு சிக்கலாக வந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் வைகோ தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்றாலும் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் சாதி, மொழி ரீதியாகவும் திமுக தரப்பிற்கு அது பின்னடவைத் தரும் என்றும் கூறப்படுகிறது. சி.பி,ராதாகிருஷ்ணன் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்றால் இன்னொரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தமிழர் ஒருவரை போட்டியாக இறக்கினால் தான் சரியாக இருக்கும் என்று கருத்தும் எழுந்துள்ளது போலும்.
இன்று மாலைக்குள் இந்தியா அணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பெயர் வெளியாகும் என்று தெரிகிறது. திருச்சி சிவாவின் பெயர் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. பாராளுமன்றத்தில் திருச்சி சிவாவின் பங்களிப்பும் அனைத்து தரப்பினரிடையே வரவேற்பு பெற்றதாகும். முக்கியமான தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றியவர் என்ற பெருமையும் பெற்றவர்.
திருச்சி சிவாவுக்கு பாஜக அணியின் சில கட்சிகளின் ஆதரவையும் இரண்டு அணியைச் சாராத ஆம் ஆத்மி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவையும் பெற்று வெற்றி பெற வைக்கும் வாய்ப்பும் இருப்பதாகவும் ஒரு தகவலும் உலவுகிறது,
தேர்தல் ஆணையத்தின் மீதான வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில் திருச்சி சிவா நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றால் அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
