வெள்ளத்தால் சின்னாபின்னமாக்கிய சிக்கிம்..14 பேர் பலி.. 102 பேர் மாயம்!

சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 பேர் உயிரிழந்த நிலையில், 102 பேர் மாயமாகி உள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆற்றையொட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆற்றை ஒட்டிய சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
கரையோரத்தில் இருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் சேற்றில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கிய இப்பகுதி மக்கள் 102 பேரை காணவில்லை. இதில் 22 ராணுவ வீரர்களும் அடங்குவர். மேலும் 26 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரும், எல்லை சாலை அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையில், சிக்கிம் அரசு உதவிக்கு ஹெல்ப்லைன் எண்களையும் வெளியிட்டுள்ளது.
VIDEO | "More than 5,000 people across villages have been affected. Necessary relief is being provided to them," says @AnitThapa14, Chief Executive, Gorkhaland Territorial Administration on flash floods in Teesta river affecting north Bengal and Sikkim. pic.twitter.com/YJ2ZJxq8jp
— Press Trust of India (@PTI_News) October 5, 2023
சிக்கிம் வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “சிக்கிமில் நிகழ்ந்துள்ள இந்த துரதிருஷ்டமவசமான இயற்கைச் சீற்றம் குறித்து முதல்வர் பிரேம் சிங் தமாங்கிடம் கேட்டறிந்தேன். தற்போதைய சவாலை எதிர்கொள்ள மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதியளித்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.