பெட்ரோல் தட்டுப்பாடு.. குதிரையில் சென்று டெலிவிரி செய்த சொமேட்டோ ஊழியர்.. வைரல் வீடியோ

 
Telangana

ஐதராபாத்தில் குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த சொமேட்டோ ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய 3 புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதனைத் தொடர்ந்து, அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள அச்சட்டங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில் வாகன விபத்து தொடர்பான திருத்தச்சட்டமும் இடம்பெற்றுள்ளது.

Telangana

சாலை விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் டேங்கர் லாரி, சரக்கு லாரி, டிரக், உள்பட பல்வேறு சரக்கு வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டேங்கர் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால், பதற்றமடைந்த வாகன ஓட்டிகள் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலும் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் குவிந்தனர். இதனால், வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனிடையே, ஐதராபாத்தின் சன்ஷல்குடா பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக குதிரையில் வாடிக்கையாளருக்கு உணவு கொண்டு சென்றார்.


இதை கண்ட சக வாகன ஓட்டிகள் அது குறித்து அவரிடம் கேட்ட போது, பெட்ரோல் பங்கில் பெட்ரோல் இல்லை, நான் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்தும் பெட்ரோல் கிடைக்காததால் குதிரையில் உணவு டெலிவரி செய்ய சென்றுக்கொண்டிருக்கின்றேன் என்று விளக்கமளிக்கிறார். பரபரப்பான ஐதராபாத் சாலையில் உணவு டெலிவரி நிறுவன இளைஞர் குதிரையில் உணவு கொண்டு சென்ற வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

From around the web