அதிர்ச்சி.. உயிரிழந்த அம்மாவின் சடலத்தோடு 2 நாட்கள் வாழ்ந்த சிறுவன்!!

 
Bengaluru

கர்நாடகாவில் தாய் இறந்தது தெரியாமல் 11 வயது சிறுவன் தாயின் சடலத்துடன் இரண்டு நாள்கள் தங்கியிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களுரு நகரைச் சேர்ந்தவர் அன்னம்மா (40). அன்னம்மாவின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், வாடகை வீட்டில் தங்கியிருந்து அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார். வீட்டு வேலை செய்வதில் கிடைக்கும் பணத்தை வைத்து தனது மகனை படிக்க வைத்து வந்துள்ளார். 

இந்த நிலையில் பிப்ரவரி கடைசியில் சில தினங்களாக அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. இதனால் பணிக்கு செல்லாமல் ஓய்வில் இருந்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு தூங்கிக்கொண்டிருந்தபோதே, அவர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தாய் இறந்தது தெரியாத சிறுவன், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ஓய்வெடுக்கிறார் என நினைத்து, அவரை தொந்தரவு செய்யாமல் இருந்துள்ளான்.

Solo Boy

அருகில் இருந்த வீட்டிலில் இருந்தவர்களிடம், தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சமைக்கவில்லை எனக்கூறி, உணவு மட்டும் வாங்கி சாப்பிட்டுள்ளான். அது மட்டும் இல்லாமல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இறந்த தாயின் உடலுக்கு அருகிலேயே படுத்து உறங்கியுள்ளான்.

இந்நிலையில் மூன்றாம் நாளும் சிறுவன் பள்ளிக்கு செல்ல, அன்றைய தினம் அன்னம்மாவின் உடலிலிருந்து மோசமாக துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து. போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசாரும் வீட்டை சோதனையிட்ட போது, உண்மை தெரியவந்துள்ளது.

dead-body

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவனிடம் விசாரித்தபோது, அம்மா ரொம்ப சோர்வா இருந்தாங்க.. அதனால தூங்கிட்டாங்கனு நினைச்சேன் என சொல்லியிருக்கிறான். இதைத்தொடர்ந்து சிறுவனை மீட்டு தாயின் சகோதரர் குடும்பத்திடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

உடல் உபாதைகளினால் அவர் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வரும்வரையில் எதையும் உறுதிபட தெரிவிக்க முடியாது என்பதால், சந்தேக மரணமென்றே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web