சிறுமியை கொன்று சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்.. 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
உத்தர பிரதேசத்தில் 7 வயது சிறுமியை கொன்று அவளது உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
உத்தர பிரதே மாநிலம் கான்பூரில் உள்ள கட்டம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் பரசுராம். இவரது மனைவி சுனைனா. இந்த தம்பதிக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆன நிலையில் குழந்தைபேறு இல்லாததால், இவர்கள் ஒரு மந்திரவாதையை அணுகியுள்ளனர். அந்த மந்திரவாதியும் ஒரு பெண் குழந்தையை நரபலி தந்து அக்குழந்தையின் கல்லீரல் உறுப்பை சாப்பிட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கையை உண்மை என்று நினைத்த தம்பதியினர் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி தனது வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை, தனது மருமகன் அங்குல் மற்றும் வீரேன் ஆகியோரின் உதவியுடன் கடத்தி நரபலி கொடுத்து மந்திரவாதி சொன்னது போல சிறுமியின் கல்லீரலை சமைத்தும் சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் தனது குழந்தையை காணாமல் தேடிய சமயம் சிதைந்த உடலுடன் கிராமத்திற்கு வெளியே வயல்வெளியில் சிறுமியின் உடல் கிடந்ததைக் கண்டு, சிறுமியின் பெற்றோர் போலிசாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலிசார் போஸ்கோவில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட அங்குல் மற்றும் வீரனுக்கு தலா 45 ஆயிரம் அபராதமும், பரசுராம் மற்றும் சுனைனாவுக்கு தலா 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளிகள் 4 பேருக்கும் கடுமையான தண்டனையான தூக்குதண்டனை எதிர்பார்த்த நிலையில் இவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர், இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.