அதிர்ச்சி.. 9-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்.. தேர்வறைக்குள் நுழையும் போது நடந்த சோகம்!!
குஜராத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தின் ஜாஸ்டன் தாலுகாவை சேர்ந்தவர் சாக்ஷ் ரஜோசரா. இவர், சாந்தபா கஜேரா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தேர்வு அறைக்குள் நுழையும் போது மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறப்பின் காரணம் குறித்து கண்டறிய மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக குஜராத்தில், குறிப்பாக ராஜ்கோட்டில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வருவது பெற்றோர் மத்தியில் பீதியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனாவுக்கு மாரடைப்புக்கு உள்ள தொடர்பு குறித்து கூறியிருந்தார்.
மேலும் கடுமையான கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாகவும், அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கக்கூடாது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.