அதிர்ச்சி.. நூடூல்ஸை சாப்பிட்ட 10 வயது சிறுவன் பலி.. மேலும் 5 பேருக்கு உடல்நிலை பாதிப்பு!

 
Uttar Pradesh

உத்தரப் பிரதேசத்தில் நூடூல்ஸ் சாப்பிட்ட 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டம் புரான்பூர் பகுதியில் வசிக்கும் சீமா என்பவருக்கும், டேராடூனை சேர்ந்த சோனு என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரோஹன், விவேக் என இரு மகன்களும் மற்றும் சந்தியா என்ற மகளும் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை தான் சீமா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் அருகே உள்ள கடையில் வாங்கிய நூடுல்ஸ் பாக்கெட்டை சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்த சாதத்தையும் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இரவு உணவுக்குப் பின்னர் அவர்கள் வழக்கம் போலத் தூங்கச் சென்றுவிட்டனர். இருப்பினும் கொஞ்ச நேரத்திலேயே சீமா உட்பட அங்கிருந்த அனைவரது உடல்நிலையும் மோசமடைய தொடங்கி உள்ளது.

boy-dead-body

இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளனர். அவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அந்த 6 பேரும் வீடு திரும்பினர். இருப்பினும், வீடு திரும்பிய கொஞ்ச நேரத்திலேயே அவர்களின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது.

அப்போது சீமாவின் மகன் ரோஹன் தனக்கு வயிறு எரிவது போல இருப்பதாகச் சொல்லி தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்துள்ளான். இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே அவன் பரிதாபமாக உயிரிழந்தான். தொடர்ந்து மற்றவர்களின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து மறுநாள் காலை அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றனர். உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை தரப்பட்டு வருகிறது.


இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதாரத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் என்ன நடந்தது என்பதை விளக்கி உள்ளனர். நூடுல்ஸுடன் சாதம் சாப்பிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இதனால் எந்த உணவு இந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது என்பது துல்லியமாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

From around the web