அதிர்ச்சி! பள்ளி வளாகத்தில் 3 வயது குழந்தை மர்ம மரணம்.. பள்ளிக்கு தீ வைத்து உறவினர்கள் போராட்டம்

 
Bihar Bihar

பீகாரில் தனியார் பள்ளியில் டியூசன் படிக்க வந்த 3 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவின் ராம்ஜிசாக் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாலையில் டியூசன் சென்ற 3 வயது ஆண் குழந்தை, டியூசன் முடிந்து வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் நேராக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அங்குள்ளவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. வேறு எங்காவது சென்றிருப்பான், நன்றாக தேடிப் பாருங்கள் என்று கூறி உள்ளனர்.

தொடர்ந்து விசாரித்தபோது, குழந்தை இருக்கும் இடம் பற்றிய கேள்விகளைத் திசைதிருப்பும் வகையில் பேசியதாக தெரிகிறது. இது குடும்ப உறுப்பினர்களிடையே மேலும் கவலையை ஏற்படுத்தியது. அதேசமயம், குழந்தை வேறு எங்கும் செல்ல வாய்ப்பு இல்லை என்பதில் உறுதியாக இருந்த பெற்றோர், பள்ளி வளாகத்தில் தேடுவதில் உறுதியாக இருந்தனர்.

Bihar

பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் தேடியபோது, இன்று அதிகாலையில் அங்குள்ள ஒரு தொட்டியில் குழந்தை சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். குழந்தையின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி துடித்தனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தை பள்ளிக்கு வருவது பதிவாகியிருந்தது, ஆனால், வெளியேறுவது பதிவாகவில்லை. எனவே, குழந்தையை கொலை செய்து உடலை தொட்டியில் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.


இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார். குழந்தையின் உடலை மறைத்து வைத்திருந்தது குற்ற நோக்கத்தை காட்டுவதால், இதை கொலை வழக்காக கருதி விசாரணை நடத்துவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, குழந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு குடும்பத்தினர் மற்றும் அவர்களது சமூகத்தினர் இன்று வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன், பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். பள்ளிக்கும் தீ வைத்தனர். பள்ளி சுவர்களின் சில பகுதிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

From around the web