அதிர்ச்சி! சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி பலி.. திருப்பதி மலைப்பாதையில் சடலம் மீட்பு!

 
Andhra

ஆந்திராவில் 6 வயது சிறுமி சிறுத்தை தாக்கி பலியான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகத்திலேயே அதிக மக்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்யும் கோவில் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் கோவில்தான். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தால் வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று சொல்வார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் சிலர் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றன.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைக்கில் சென்று கொண்டு இருந்த போலீஸ்காரர் மற்றும் பக்தர் மீது சிறுத்தை ஒன்று பாய்ந்து வந்து தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். கடந்த மாதம் அலிபிரி நடைபாதையில் குடும்பத்தினருடன் நடந்து சென்று கொண்டு இருந்த 3 வயது சிறுவனை திடீரென சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது. பக்தர்கள் சிறுத்தை மீது கல்வீசி தாக்கியதால் குழந்தையை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது.

Leopard

இந்த நிலையில் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கோவூர் மண்டலம் போத்தி ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் லக்ஷிதா (6). தினேஷ்குமார் நேற்று இரவு 7.30 மணி அளவில் மனைவி, மகளுடன் அலிபிரி நடைபாதையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். நரசிம்ம சாமி கோவில் அருகே நடந்து சென்ற போது லக்ஷிதா திடீரென காணாமல் போனார்.

சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் மகளை காணாததால் பதற்றம் அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் இரவு முழுவதும் வனப்பகுதியில் லக்ஷிதாவை தேடி வந்தனர்.

Andhra

மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி தனது பெற்றோருக்கு முன்பாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் லக்ஷிதா நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை கண்டு பிடித்தனர். சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் சாணம் கிடந்தது. இதனால் சிறுத்தை தான் சிறுமியை இழுத்துச் சென்று அடித்து கொன்று இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். சிறுத்தை தாக்கி சிறுமி பலியான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web