கல்லூரியில் பாலியல் தொல்லை.. தந்தைக்கு உருக்கமான செய்தி அனுப்பிவிட்டு மாணவி விபரீத முடிவு

 
Andhra

ஆந்திராவில் கல்லூரியில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தனது தந்தைக்கு மாணவி உருக்கமான செய்தி ஒன்றை அனுப்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் அனகாபல்லி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் உங்கள் மகளை காணவில்லை எனக்கூறி மாணவியின் குடும்பத்திற்கு கல்லூரியிடம் இருந்து அழைப்பு வந்தது.

இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர், அவளது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் மாணவியிடம் இருந்து பதில் வராததால், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, நள்ளிரவு 12.50 மணியளவில் அந்த மாணவி, தனது குடும்பத்தினருக்கு வாட்ஸ் அப் மூலம் உருக்கமான செய்தி ஒன்றை அனுப்பினார்.  

அந்த செய்தியில், “பதற்றப்பட வேண்டாம். நான் சொல்வதை கேளுங்கள். இதை நீங்கள் புரிந்து கொள்ளமாட்டீர்கள். தயவு செய்து என்னை மறந்துவிடுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா அப்பா. நீங்கள் என்னைப் பெற்றெடுத்து வளர்த்ததற்கு நன்றி. என் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. உன் எதிர்காலத்தில் கவனம் செலுத்து. உனக்கு பிடித்ததையெல்லாம் படி. என்னைப் போல் திசைதிரும்பிவிடாதே. பிறரால் பாதிக்கப்படாதே. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். நல்ல வாழ்க்கையை வாழுங்கள்.

Dead-body

கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால் நான் இந்த முடிவை எடுக்கிறேன். ஆசிரியர்களிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது உதவாது. அவர்கள் எனது புகைப்படங்களை எடுத்து என்னை மிரட்டுகிறார்கள். மற்ற பெண்களும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் யாரிடமும் சொல்ல முடியாது. மேலும் எங்களால் கல்லூரிக்கு செல்வதையும் தவிர்க்க முடியவில்லை. இடையில் சிக்கிக்கொள்கிறோம். நான் காவல்துறையில் புகார் அளித்தாலோ அல்லது அதிகாரிகளை அணுகினாலோ எனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள்.

நான் இந்த முடிவை எடுப்பதற்குக் காரணம், நான் இப்போது போனால், சில வருடங்கள் நீங்கள் என்னை நினைத்து கவலைப்படுவீர்கள். பின்னர் என்னை மறந்துவிடுவீர்கள். ஆனால், நான் அருகில் இருந்தால், நீங்கள் எப்போதும் என்னைப் பார்த்து வருத்தப்படுவீர்கள். மன்னிக்கவும்.. நான் உங்களை எல்லாம் பதற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை படித்த மாணவியின் குடும்பத்தினர், உடனடியாக “போலீசார் வந்து கொண்டு இருக்கின்றனர்..  அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்” என மாணவிக்கு செய்தி அனுப்பி கெஞ்சினார்கள், ஆனால் மாணவியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. சிறிது நேரத்தில் மாணவி, கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கல்லூரி வளாகத்தில் மாணவியில்  உடல் கண்டெடுக்கப்பட்டது.

Police

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை, இதுகுறித்து கூறுகையில், “எனது மகள் ஏன் இந்த முடிவை எடுத்தாள் என்று எனக்குத் தெரிய வேண்டும். நான் அவளை மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் வளர்த்தேன். அவள் 10-ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்தாள். அவள் இங்கே நன்றாகப் படிக்க வேண்டும் என்று நம்பி இந்த கல்லூரியில் சேர்த்தோம்.” என சோகத்துடன் கூறினார்.

மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், “நாங்கள் அனைத்து மாணவர்களையும் கவனித்து வருகிறோம். பெண்கள் விடுதிக்கு ஆண்கள் செல்ல முடியாது. பெண்கள் வார்டன்கள் உள்ளனர். பாலியல் துன்புறுத்தலுக்கு வாய்ப்பு இல்லை” என தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஆசிரியர்களிடமும், மற்ற மாணவர்களிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும்,  அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.” எனவும் தெரிவித்தார்.

From around the web