மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பலி.. டெல்லியில் சோகம்!

 
Delhi

டெல்லியில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள விவேக் விஹார் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்காக இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு 11.32 மணியளவில் டெல்லி தீயணைப்பு துறைக்கு இந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delhi

உடனடியாக 16 தீயணைப்பு வீரர்கள் உட்பட 4 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. அப்போது மருத்துவமனை வளாகம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் உள்ளே சிக்கி இருந்த 12 குழந்தைகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

மேலும் மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள், குழந்தைகளின் உறவினர்கள் உட்பட 12 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 12 குழந்தைகளும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் தீயினால் ஏற்பட்ட கடும் புகை மற்றும் வெப்பம் காரணமாக 7 குழந்தைகள் இதுவரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 5 குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படாததால், மருத்துவமனை வளாகத்தில் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கும் சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web