50 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஸ்கூட்டி.. அசத்தல் திட்டத்தை அறிவித்த முதல்வர்!

 
Assam

அசாமில் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு ஸ்கூட்டி வழங்க ஆலோசித்து வருவதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். 

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அசாம் மாநிலம் முழுவதும் உள்ள 4,372 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் 3.78 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

கவுகாத்தியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (ஜிஇஎம்) போர்டல் மூலம் சைக்கிள்களை வாங்குவதற்கு ரூ.167.95 கோடியை மாநில அரசு நிதி ஒதுக்கியது. அதன்படி, தேஜ்பூரில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று கலந்து கொண்டார்.

Himanta Biswa Sarma

அப்போது பேசிய முதல்வர், “மாநிலத்தில் தொலைதூரப் பகுதிகளில் சில பள்ளிகள் உள்ளன. இதனால் அந்த ஆசிரியர்கள் தாமதமாக பள்ளிக்கு வர நேரிடுகிறது. எனவே, அத்தகைய 50 ஆயிரம் ஆசியர்களுக்கு ஸ்கூட்டிகள் வழங்க உள்ளோம். இதன்மூலம் அவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர முடியும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இது உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் எளிதாகச் சென்று வர உதவும். எங்கள் அரசிற்கு முக்கியமானது என்னவென்றால், ஆசிரியர்கள் சரியான நேரத்தில் சென்றடைவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களும் ஒரு நிமிடம் கூட கற்றலை இழக்காமல் இருக்க வேண்டும்.

Scooty

எந்தெந்த பகுதிகளில் எளிதாக பயணிக்க சாலைகள் மற்றும் பாலங்கள் தேவை என்பதை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். மாநிலத்தின் பசுமையை அதிகரிக்க மாணவர்கள் தலா ஒரு மரக்கன்றுகளையாவது நட வேண்டும்” என்றார்.

From around the web