பள்ளி பேருந்து - பயணிகள் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. மாணவி உள்பட 2 பேர் பலி!
ராஜஸ்தானில் தனியார் பேருந்தும் பள்ளி பேருந்தும் மோதி கொண்ட விபத்தில் ஒரு மாணவி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், நேற்று அமரபுரா - கார்கேடி பகுதியில் சாலை விபத்து நடந்தது. இந்த விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பள்ளி பேருந்தின் ஓட்டுநர் ககன் ஜாட் மற்றும் 15 வயது மாணவி என இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 15 பேர் சிஎச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் 6 பேர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அஜ்மீர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பள்ளிக்கு சொந்தமான தனியார் பேருந்தும், பயணிகள் தனியார் பேருந்தும் மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது. விபத்து சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் வருவது தெரியாமல், தொடர்ந்து வேகத்திலேயே பேருந்து இயக்கப்பட்டது விபத்திற்கு காரணமாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, அஜ்மீரின் ஆதர்ஷ்நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள பட்லியா புலியா என்ற இடத்தில் வோல்வோ பேருந்து டிரெய்லருடன் மோதியதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார், மேலும் சுமார் 36 பயணிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.