சனாதன பேச்சு சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி மீது ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

 
Udhayanidhi

சனாதன பேச்சு சர்ச்சை தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேசத்தின் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. 

தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்வதோடு, வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

Udhay

இந்த நிலையில், சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம்சிங் லோதி ஆகியோரின் புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக உதயநிதி பேச்சு தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசிய போது, “ஒரு கட்சியாக அனைத்து மதங்களையும் மதிப்பதாகக் கூறியதுடன், மற்றவர்களுக்கும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை என்பதே காங்கிரஸின் சித்தாந்தம்” எனவும் கூறினார். 

Udhaynidhi

அதேநேரம், உதயநிதியின் கருத்துக்கு கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் “சமத்துவத்தை ஊக்குவிக்காத எந்தவொரு மதமும் நோயைப் போன்றது தான்” என பேசினார். இதேபோன்று காங்கிரசை சேர்ந்த ப.சிதம்பரம் போன்ற பல தலைவர்களும் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

From around the web