சோகம்.. கையில் கத்தை கத்தையா பணம்.. இருந்தும் பசியால் உயிரிழந்த பிச்சைக்காரர்!
குஜராத்தில் இரண்டு நாட்கள் உணவு இல்லாமல் உயிரிழந்த யாசகரின் உடைகளில் இருந்து 1.14 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை போலீசார் மீட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் யாசகம் எடுத்தபடி சுற்றித் திரிந்துள்ளார். கடந்த சில நாட்களாக உணவின்றி அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் அவரை மீட்டு வல்சாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பசியால் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனிடையே அவர் வைத்திருந்த உடமைகளைப் போலீசார் மீட்டு சோதனை நடத்தினர். அதில் அவரது பை மற்றும் அவர் போட்டிருந்த உடைகளில் 1.14 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது.
இதில் 500 ரூபாய் நோட்டுகள் 38, 200 ரூபாய் நோட்டுகள் 87, 100 ரூபாய் நோட்டுகள் 537 மற்றும் 10, 20 ரூபாய் நோட்டுகளும் அடங்கும். இவை அனைத்தையும் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி அவர் தனது ஸ்வெட்டர் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்திருந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தனக்கு தேநீர் வேண்டும் என்றும், மிகுந்த பசியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து இருந்ததால் சிகிச்சையைத் தொடங்கிய நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.