ரூ.500 பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு... வங்கி கணக்கிற்கு அனுப்ப முடிவு!
புதுச்சேரியில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்பாக சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று புதுச்சேரியில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் 2023-ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.470 பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் 3,53,249 ரேஷன் கார்டுகளுக்கு தலா 500 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே 1,30,791 சிவப்பு ரேஷன் கார்டுகளில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.500 மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 விதம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.