ட்விட்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம்.. கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 
Twitter

சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது தொடர்பாக ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தின் போது விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போடப்பட்ட சில பதிவுகள் மற்றும் தொடங்கப்பட்ட கணக்குகளை நீக்க கோரி ட்விட்டர் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியது. 

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த உத்தரவினை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் மனுத்தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என்றும் பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு இது எதிராக உள்ளது என்றும் நீதிமன்றத்தில் ட்விட்டர் கூறியிருந்தது.

twitter

இதையடுத்து, பதிவுகளை நீக்குவது தொடர்பாக உரிய காரணங்களை தெரிவிக்குமாறு ஒன்றிய அரசிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்குதொடர்பான இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் தனது உத்தரவில் கூறுகையில், ஒன்றிய அரசுக்கு எதிரான ட்விட்டர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கணக்குகளை முடக்க கோரும் அதிகாரம் அரசுக்கு உண்டு. உத்தரவுகளை பின்பற்றாமல் ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

Karnataka-HC

இதற்காக, அந்த நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை கர்நாடக சட்ட சேவைகள் ஆணையத்தில் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இந்த அபராத தொகையைச் செலுத்தத் தவறும் ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ. 5,000 கூடுதல் அபராதம் செலுத்த வேண்டும்

இந்திய அரசியலமைப்பின் 19 மற்றும் பிரிவு 21 ஆகியவற்றின் கீழ் இந்திய குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்து சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமையை வெளிநாட்டு நிறுவனமான ட்விட்டர் கோர முடியாது என்று உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

From around the web