குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10 ஆயிரம்.. ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி!

 
Rajasthan

ராஜஸ்தானில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கெளரவ உதவித்தொகையாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரசும், அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மாநில தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜுன்ஜுனு பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா வதேரா, மாநில முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டா் 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500-க்கு அளிக்கப்படும் என்றும் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கெளரவ உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும் இருவரும் ஒன்று சோ்ந்து தோ்தல் வாக்குறுதி அளித்தனா்.

Rajasthan

தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா வதேரா பேசியதாவது, ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எந்த வகையிலும் உரிய பயன்களை அளிக்காத வெற்றுத் திட்டங்களாகும். அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அடித்தட்டு மக்கள் வரை பயன் பெறும் திட்டங்களை செயல்படுத்தி சாதித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி சாதனை படைத்துவிட்டதாக பாஜகவினா் கூறுகிறாா்கள். ஆனால், அதனை அமல்படுத்த அவா்களுக்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். மக்களை ஜாதி, மதரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் தேடுவதே பாஜகவின் கொள்கை. தோ்தல் நேரத்தில் இந்த பிரிவினை அரசியலை பாஜகவின் மிகத் தீவிரமாக கையிலெடுப்பாா்கள். ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்காக நாட்டு மக்களுக்கு அனைத்து வகையான நெருக்கடிகளையும் பாஜக அளிக்கும்.

ஒன்றிய பாஜக அரசு ஒரு சில பெரும் தொழிலதிபா்களுக்காகவே நடத்தப்படுகிறது. மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. மக்கள் பிரச்னைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்வதில்லை. இதில் இருந்த எந்த மாதிரியான அரசும், தலைவா்களும் தேவை என்பதை மக்களே முடிவு செய்து கொள்ள வேண்டும். மக்களுக்காக பாஜக பணியாற்றாமல் தோ்தலின்போது ஜாதி, மதம் குறித்து பேசி ஓட்டுகளைப் பெறுகிறது.

Priyanka

அண்மையில் கோயில் ஒன்றில் தரிசனம் செய்துவிட்டு மூடப்பட்ட உறையை பிரதமா் மோடி நன்கொடையாக அளித்திருந்தாா். அதை பின்னா் பிரித்து பாா்த்தபோது அதில் அவா் ரூ. 21 மட்டும் நன்கொடையாக இருந்தது. அதைபோல்தான் ஒன்றிய அரசின் அறிவிப்புகளும் வெற்று வாக்குறுதிகளாக உள்ளன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய மகளிா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் மம்தா சா்மா மற்றும் பாஜக நிா்வாகிகள் கிஷண்காா்க், விகாஷ் சௌதரி உள்ளிட்டோா் காங்கிரஸில் இணைந்தனா். மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங், ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் உள்ளிட்டோரும் பேசினா்.

From around the web