பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் துப்பாக்கி முனையில் கொள்ளை... அதிர்ச்சி வீடியோ!

 
Delhi Delhi

டெல்லியில் பட்டப்பகலில் பரபரப்பான சுரங்கச்சாலையில் காரை மறித்து துப்பாக்கி முனையில் ரூ. 2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் சராய் காலே கான் பகுதியையும் நொய்டாவையும் இணைக்கும் சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கச்சாலை உள்ளது. இந்த நிலையில், பிரகதி மைதான் சுரங்கச் சாலையில் கடந்த 24-ம் தேதி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்போது அந்த காரை பின் தொடர்ந்து 2 பைக்கில் வந்த 4 பேர் திடீரென காரை இடைமறித்தனர். ஹெல்மெட் அணிந்திருந்த அனைவரும் காரை இடைமறித்தனர். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய 2 பேர் காரில் இருந்தவர்களை தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டினர். பின்னர், காரில் இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

Delhi

பட்டப்பகலில் பரபரப்பான சுரங்கச் சாலையில் துப்பாக்கி முனையில் காரில் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தலைநகரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் துணை நிலை ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்லி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய ஒருவரை நியமிக்க வழி செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒன்றிய அரசால் டெல்லியை பாதுகாப்பான நகராக மாற்ற முடியவில்லை என்றால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நகரத்தை அதன் குடிமக்களுக்காக எவ்வாறு பாதுகாப்பாக மாற்றுவது என்பதை ஆம் ஆத்மி அரசு செய்து காட்டும் என தெரிவித்துள்ளார்.

From around the web