மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை.. பார்சி சமூக முறைப்படி இறுதிச்சடங்கு

 
Rattan Tata

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா  (86) மும்பையில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Rattan Tata

ரத்தன் டாடாவின் உடல் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு, மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள தேசிய கலை மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு மக்கள் சாரை சாரையாக வந்து ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தினர். டாடா குழுமத்தின் நிர்வாகிகள், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு மாலையில் ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. ரத்தன் டாடாவின் உடல் மும்பை ஒர்லியில் உள்ள பார்சி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள பிரார்த்தனை மையத்தில் உடல் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Rattan Tata

ஒன்றிய அரசு சார்பில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார். ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் மற்றும் பல்வேறு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். ரத்தன் டாடாவின் உடலுக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. காவல்துறை சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர், ரத்தன் டாடாவின் உடலுக்கு பார்சி சமூக முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. 

From around the web