அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. வினோத கோரிக்கை வைத்த கர்ப்பிணி பெண்கள்!

 
UP

உத்தர பிரதேசத்தில் ராமர் கோயில் திறப்பு தினத்துன்று குழந்தையை பெற்று கொள்ள விரும்புவதாக கூறி கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் புதிதாகக் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பாஜகவைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Ramar Kovil

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதே நாளில் (ஜனவரி 22) 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைப் பெற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2-ம் வாரத்திற்கு பிறகு பிரசவ தேதி உள்ள 35 பெண்கள், ராமர் கோவில் திறப்பு தினத்தன்று குழந்தை பெற வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள மருத்துவமனையில் விண்ணப்பித்து உள்ளனர். மேலும், இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 15 அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்படும் நிலையில், ஜனவரி 22-ம் தேதி 35 கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Pregnant Mother

ராமர் கோவில் திறப்பு தினத்தன்று பிரசவம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த மால்தி தேவி என்ற கர்ப்பிணி பெண் கூறுகையில், “வரும் ஜனவரி 17-ம் தேதி, எனது குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி கொடுத்துள்ளனர். ஆனால், ராமர் கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும் நாளில் என் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால், எனது குழந்தை வளர்ந்து வெற்றியும் பெருமையும் பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.

From around the web