நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் ‘பிளேயிங் கிஸ்’ சர்ச்சை.. சபாநாயகரிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார்
நாடாளுமன்றத்தில் எதிர்வரிசையில் இருந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தவறாக நடந்து கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தன. இதன்மீது 2வது நாளாக நேற்றும் விவாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காரசாரமாகப் பேசினார். இதற்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், “எனக்கு முன் பேசிய நபர் (ராகுல்) அவையில் இருந்து புறப்படும்முன் அநாகரிகமாக நடந்துகொண்டார். பெண் உறுப்பினர்கள் அமர்ந்துள்ள நாடாளுமன்றத்திற்குப் பறக்கும் முத்தம் கொடுக்க ஒரு பெண் விரோதப் போக்குகொண்ட ஆணால் மட்டுமே முடியும். இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தை, இந்த நாடாளுமன்றத்தில் இதற்குமுன் ஒருபோதும் நடந்ததே இல்லை” என்றார்.
அதாவது, மக்களவையில் ஸ்மிருதி இரானி பேசிக் கொண்டிருந்தபோது ராகுல் காந்தி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது பாஜக பெண் எம்.பிக்களைப் பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுத்துபூர்வ புகார் அளித்துள்ள 20-க்கும் மேற்பட்ட பாஜக பெண் எம்.பி.க்கள், “அவையில் ஸ்மிருதி இரானி பேசிக்கொண்டிருந்தபோது ராகுல் காந்தி அநாகரிகமாக நடந்து கொண்டார். அவரது இந்த நடவடிக்கை பெண் எம்.பி.க்களை அவமதித்த செயல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் கண்ணியத்துக்கும் எதிரானது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய அமைச்சர் சோபா கரந்தலாஜே, “அவையில் ஓர் உறுப்பினர் இவ்வாறு நடந்து கொண்டது இதுதான் முதல்முறை. பெண் எம்.பி.க்களைப் பார்த்து அவர் ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்” என்று கூறினார்.